--- --:--:-- --

தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்கும் 232 வேட்பாளர்கள்!

1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகின. இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக 85.15% வாக்குகள் பதிவானது இந்தத் தேர்தலில்தான் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்து, இது வரலாற்று சாதனை எனவும் தெரிவித்தது.

 

இந்த அளவிற்கான வாக்குப் பதிவுக்கு முக்கிய காரணமாக தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். பணி மூலம், இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் என சுமார் 74 லட்சம் பேர் வரை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகின. இதற்கு விஜய்யின் வருகையும் காரணம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்யும், “இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று” என தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்னதாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.

 

அடுத்தக் கட்டமாக தவெக தலைவர் விஜய், வரும் 30ஆம் தேதி தன் கட்சி சார்பில் போட்டியிட்ட 232 வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே கடந்த 24ஆம் தேதி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தன் வேட்பாளர்களை சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது பெரும் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon