--- --:--:-- --

அழகர் மலை முதல் வைகை வரை – கள்ளழகர் பயணத் திட்ட முழு விவரம்

3

துரை மாநகரம் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவைக் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாநகர காவல்துறை, மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

 

அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவது முதல் மீண்டும் மலைக்குச் செல்வது வரையிலான பயணத் திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 29-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.15 மணிக்கு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்குப் புறப்படுகிறார். மறுநாள் ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் ‘எதிர்சேவை’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

 

தொடர்ந்து ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு 11.00 மணி முதல் 11.59 மணிக்குள், தல்லாகுளத்திலிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காகத் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். விழாவின் சிகர நிகழ்வாக, மே 1-ஆம் தேதி அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறுகிறது.

 

 

மே 2-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வண்டியூர் வைகை ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.

 

 

திருவிழாவின் நிறைவுப் பகுதியாக, மே 4-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்திலிருந்து கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்குகிறார். இறுதியாக மே 5-ஆம் தேதி காலை 10.40 மணி முதல் 11.10 மணிக்குள் அழகர் மலையைச் சென்றடைகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ள இந்த வைபவத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon