--- --:--:-- --

வாக்குச்சாவடியில் புகைப்படம், வீடியோ எடுத்தால் 3 மாதம் சிறை..!

8

மிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 2.93 கோடி பெண்கள், 2.80 கோடி ஆண்கள், 3-ம் பாலினத்தவர் 7,728 பேர் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

வாக்களிப்பதற்கு வசதியாக, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இசிஐநெட் இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை ஓ.டி.பி. மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

 

 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை அறிந்து கொள்வதற்கு 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் EPIC என்ற வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பலாம். உதாரணமாக EPIC IQR1251510 டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம். EPIC என்ற வார்த்தைக்குப் பிறகு இடைவெளி விட்டு நம்பரை டைப் செய்ய வேண்டும். இதன் மூலம் வாக்குசாவடி, வரிசை எண், பாகம் எண் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். அடுத்ததாக, இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். அதற்காக https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net இணையதளங்களை அணுக வேண்டும்.

 

 

மேலும், ECINET, Votershelpline, Sweetha செயலிகள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பு, வாக்குச்சாவடி எங்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுவீடாக தரப்படும் வாக்காளர் தகவல் சீட்டிலும் (பூத் சிலிப்) வாக்களிக்கத் தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த அனைத்து விவரங்களையும் அறிந்த பின்பு வாக்குச்சாவடிக்கு சென்றால் எளிதாக வாக்களித்துவிட்டு வரலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அங்கு செல்வது வீண். எனவே இன்றே அதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon