பிரசார களத்தில் குதித்த துர்கா ஸ்டாலின்..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், தி.மு.க-வின் வெற்றிக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வலிமையான குரல் பிரசாரக் களத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே ‘சைலண்ட்’ பிரசாரம் செய்து வந்த துர்கா ஸ்டாலின், இப்போது அக்கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்காகவும் வீதி வீதியாக இறங்கி வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்குப் பிறகு, தி.மு.க-வின் முதல் குடும்பத்திலிருந்து களமிறங்கியுள்ள நான்காவது முக்கியப் பிரச்சாரகராக துர்கா ஸ்டாலின் மாறியிருப்பது, தேர்தல் களத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை எட்டியுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஊர் ஊராகப் படையெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், இதுவரை இல்லாத ஆச்சரியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து துர்கா ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். மப்பேடு பகுதியில் வீதி வீதியாகச் சென்ற அவர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, அவருக்கு மப்பேடு பகுதியில் நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களுடன் மிகவும் எளிமையாக உரையாடிய துர்கா ஸ்டாலின், தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். பொதுவாகத் தேர்தல் காலங்களில் மு.க. ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே துர்கா ஸ்டாலின் பிரசாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி, இதர கட்சி நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
இதன் மூலம் தி.மு.க முதல் குடும்பத்தில் இருந்து மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து நான்காவது முக்கியப் பிரச்சாரகராக துர்கா ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். இது கட்சித் தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு முன்பாக, கடந்த வாரம் சீர்காழி தொகுதியில் துர்கா ஸ்டாலின் புயல் வேகப் பிரசாரம் மேற்கொண்டார். பழையார், மடவாமேடு, திருமுல்லைவாசல் போன்ற மீனவ கிராமங்களுக்குச் சென்ற அவர், அங்குள்ள கன்னியம்மன் மற்றும் செல்ல காளியம்மன் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது மீனவப் பெண்கள் அவரோடு ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், “தேர்தல் முடிந்ததும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும்” என உறுதி அளித்தார். தி.மு.கவின் ‘சைலண்ட்’ பிரச்சாரகராக வலம் வரும் துர்கா ஸ்டாலினின் இந்த களப்பணி, குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




