--- --:--:-- --
1

காங்கிரஸ் கட்சி யாருடைய கைப்பாவையாகவும் இருக்காது என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசு தனக்கு எதிராக அவதூறுகளை பரப்பியதாக சாடினார். திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒன்றுதான் என்று விமர்சித்த விஜய், கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

 

அதேபோல், “சில பல கோடிகளைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியை தனது பைக்குள் போட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் உள்ளது” என்றும் விஜய் பேசியிருந்தார்.இதற்கிடையே தான், தவெக தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சி மிக பழமையான அரசியல் கட்சி என்றும் நாட்டு மக்களுடன் மட்டும் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி யாருடைய கைப்பாவையாகவும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

 

இதேபோன்று காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம் மோகனும் விஜயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் இருப்பதாக கூறுவதை விட ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு என்று கூறியுள்ள ராம் மோகன், காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon