மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட ஸ்ரீதேவி..!
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், தற்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக இவர் நடிப்பில் தெலுங்கில் பெத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து ஜான்வி நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரமாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சென்ற இடத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அப்பொழுது போனி கபூர் மோனா கபூரின் கணவராக இருந்தார். அவர்களுக்கு அர்ஜுன் கபூர், அன்ஷுலா கபூர் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தகப்பனாக இருக்கும் போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதேவியுடன் போனி கபூர் வாழ்ந்து வந்தார். இதனால், தங்களின் அப்பா ஒரு நடிகையை திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு போனதால் பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாக அண்மையில் அன்ஷுலா கபூர் தெரிவித்தார். தன் அம்மா மோனா கபூரின் வாழ்க்கையை ஸ்ரீதேவி பறித்துவிட்டார் என அவர் மீது அர்ஜுன் கபூர் கடைசி வரை கோபமாக இருந்தாராம். இந்த நிலையில், தனது அம்மாவின் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
“அம்மா உயிருடன் இருந்தபோது அவரை ஒரு குடும்பத்தை பிரித்த பெண் என்று விமர்சித்தார்கள். யாரும் அவரிடம் அன்பாக இல்லை. ஆனால், இறந்த பிறகு அம்மா பற்றி நல்லவிதமாக பேசினார்கள். இருப்பினும் குடும்பத்தை பிரிந்த பட்டம் மற்றும் பிற மோசமான விமர்சனங்களும் அம்மாவை அதிகமாக பாதித்தது” என ஜான்வி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





