வேலூரில் விஜய் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு – போலீஸார் விதித்த 20 நிபந்தனைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதி கோரி த.வெ.க நிர்வாகிகள் அளித்த மனுவைப் பரிசீலித்த வேலூர் மாவட்ட எஸ்.பி சிவராமன், நிகழ்ச்சி நடைபெற உள்ள 33 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை நேரில் ஆய்வு செய்தார். கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த சுமார் 20 முக்கிய நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. குறிப்பாக நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 4,900 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விஜய்யின் மக்கள் சந்திப்புகள் பெரும்பாலும் திறந்தவெளி மைதானங்களில் பந்தல் மற்றும் நாற்காலிகள் வசதியின்றி நடத்தப்பட்டு வந்தன. இதனால் தொண்டர்கள் வெயிலில் அவதிப்படுவதும், நெரிசலில் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்தது. குறிப்பாக, சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் த.வெ.க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்முறையாக வேலூர் கூட்டத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, 5,000 நாற்காலிகள் போடப்பட உள்ளன. பங்கேற்பாளர்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
தலைவர் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலூர் வரவுள்ளார். எனவே, ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் யாரும் அவரது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களால் வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இக்கூட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு த.வெ.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
அகரம்சேரியில் இதற்காக நிலம் சமன் செய்யப்பட்டு, வாகனங்களை நிறுத்தத் தனி இடவசதியும் தயார் செய்யப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி இக்கூட்டத்தை நடத்தத் தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




