திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.வடிவேல்சாமி, பொருளாளர் டி. சதீஸ்குமார் மற்றும் இணைச் செயலாளர் எஸ். விக்னேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, இந்த இட ஒதுக்கீட்டை வரும் 2026–27 சங்க தேர்தலில் அமல்படுத்துவது, திருச்சி வக்கீல் சங்கத்தின் சட்ட விதிமுறையை உடனடியாக திருத்தம் செய்து துணை தலைவர், இணை செயலாளர், இளநிலை நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கூடுதலாக தலா ஒரு பெண் வக்கீலை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது, சங்கத்தின் சேமநல நிதியை ரூ.25 ஆயிரம் உயர்த்தி ரூ.1.25 லட்சமாக வழங்குவதை வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக தீர்மானம் போடப்பட்டது.
மேலும், ஆண்டுதோறும் பிப்.19-ந்தேதி அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தன்று கோர்ட் புறக்கணிப்பை, ஜாக் தீர்மானத்தை ஏற்று வரும் 19-ந்தேதி புறக்கணிப்பை கைவிடுவது, அன்று வக்கீல்கள் அனைவருக்கும் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் வழங்குவது, லால்குடி கோர்ட்டுக்கு புதிய கட்டடம் கட்டித்தர போராடி வரும் லால்குடி வக்கீல்கள் சங்கத்தின் போராட்டத்துக்கு திருச்சி வக்கீல்கள் சங்கம் முழு ஆதரவை தெரிவிப்பது, இதற்காக திருச்சி வக்கீல்கள் சங்கம் வரும் 20-ந் தேதி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது, திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் உள்ள 400 பெண் வக்கீல்களின் நலனுக்காக அவர்களது ஓய்வறையை திருச்சி வக்கீல்கள் சங்கத்துடன் இணைக்க முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கோரிக்கை வைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி வக்கீல் சங்கத்தில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக வக்கீல் சங்கத்தின் செயலாளர் சி.முத்துமாரி தெரிவித்தார்.






