தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது. தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க.வும், கடந்த தேர்தலில் பெற்ற தோல்வியை சரி செய்ய அ.தி.மு.க.வும் போராடி வரும் நிலையில், புதிய கட்சியான த.வெ.க ஒரு பக்கம் தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், நாம் தமிழர் கட்சியும் தனித்து நிற்கிறது.
தி.மு.க.வின் இந்தியா கூட்டணி அ.தி.மு.க.வின் என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்து வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 முறை போட்டியிடாது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது, உள்ளிட்ட விதிகளை மீறியதாக நாடு முழுவதும் 474 கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கொங்கு மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்க நடவடிக்கையை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கட்சிகளின் பதிவுகளை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தேர்தல் ஆணையர்கள் இந்த முடிவை எடுக்கவில்லை. நடந்து முடிந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் பங்கேற்றதாகவும், அதனால் கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் ரத்து செய்யலாமே தவிர பதிவை நீக்கம் செய்ய முடியாது என்று வாதிட்டனர்.
தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இந்த கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை. மற்றும் கட்சியின் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கட்சி பதிவுகளில் இருந்து இந்த கட்சிகள் நீக்கம் செய்யப்படடதற்கு தடை விதிக்க முடியாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கை மார்ச் 2-வது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.






