வியூகமே இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும்? – ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்

வியூகமே இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும் என்று நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.

 

அதன்படி பாஜக சார்பில் நேற்று அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என அண்ணாமலை உள்ளிட்டோர் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மாற்றப்பட்டார்.

 

அதேசமயம், அண்ணாமலை மீதும் மூத்த தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது தந்தையின் உடல்நிலையை காரணமாக கூறி, சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு தன்னை பொறுப்பாளராக நியமித்தனர் என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கில் தன்னை பொறுப்பாளராக நியமித்ததற்கு காரணம் என்ன என்றும் அண்ணாமலை வினவியதாக கூறப்படுகிறது. வியூகத்தை விளக்கிக் கூறினால், ஒரு தொகுதியில் கூட தான் பொறுப்பாளராக பணியாற்ற தயார் என அண்ணாமலை பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும், தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதியை கூறினால், எப்படி வெற்றிபெற முடியும் என்று வினவிய அண்ணாமலை, வியூகமே இல்லாமல் என்ன அரசியல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.