ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடற்கரை கிராமமான தீர்த்தாண்டதானத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனமர் சகல தீர்த்தமுடைய ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ராமபிரான் வழிபட்ட தலமாக கருதப்படும் இக்கோவிலில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட, அதிகாலை முதலே பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் குவிந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தபோதிலும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக:சாலை வசதி: கடற்கரைக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதி முறையாக சுத்தம் செய்யப்படாததால் கடற்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் தேங்கிக் காணப்படுகின்றன.

மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் முதியவர்களும், பெண்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த முக்கிய புனிதத் தலத்தில், ஊராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சாலை வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






