இளையராஜா மீதான பாசத்துக்கு என்ன காரணம்? – முதல்வர் விளக்கம்
இசையமைப்பாளர் இளையராஜா மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்ற பாசம் என முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ‘கலைமாமணி விருது’ விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பித்தார்.
நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லிங்குசாமி, நடன இயக்குநர் சாண்டி ஆகியோருக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
பின்னணி பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகன் விஜய் யேசுதாஸ் விருதை பெற்றுக் கொண்டார். யேசுதாஸ் காணொளி வாயிலாக நன்றி தெரிவித்தார். பாரதியார் விருது முருகேச பாண்டியனுக்கும், முதுபெரும் நாட்டிய கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கு பாலசரசுவதி விருதும் வழங்கப்பட்டது. பாடகி ஸ்வேதா மோகனுக்கான கலைமாமணி விருதை அவரது தாயார் சுஜாதா மோகன் பெற்றுக் கொண்டார்.
’கலைமாமணி விருது’ விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இளையராஜாவுக்கான பாராட்டு விழாவை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்துவிடும் என்றார். இதனிடையே, இயல், இசை, நாடக மன்றத்திற்கான நிதியை 4 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




