காவடி தூக்கும் செங்கோட்டையன்! பாஜகவுக்கு ஐஸ் வைத்து அறிக்கை..! அதிமுக விஸ்வாசிகள் கடும் அதிர்ச்சி!
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த சில வாரங்களாக எடுத்து வரும் அரசியல் நகர்வுகள், அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தி, அவர் முழுக்க முழுக்க பாஜகவுக்கு காவடி தூக்கும் வகையில் இருப்பதாக, அ.தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எம்.ஜி.ஆர். காலத்தை சேர்ந்த அதிமுக சீனியர் தலைவரான செங்கோட்டையனுக்கும் முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம், ஈரோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இதுவே இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியதன் ஆரம்பம் எனக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தி நீடித்துக்கொண்டிருந்த சூழலில்தான், செப்டம்பர் 5-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது, அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கெடு விதித்தார். இந்தச் சந்திப்பில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
செங்கோட்டையனின் இந்தத் திடீர் பேச்சால் கடும் எரிச்சலடைந்தார் எடப்பாடி பழனிசாமி. அடுத்த நாளே அவரை அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். செங்கோட்டையனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் பொறுப்புகளும் தடாலடியாக பறிக்கப்பட்டன.
“ஹரித்துவார்” பயணம் டெல்லியில் முடிந்தது!
ஆனாலும், இதற்கெல்லாம் செங்கோட்டையன் அசரவில்லை. கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டபோதும், செங்கோட்டையன் தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. “அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார். இந்தச் சூழலில்தான், திடீரென கோவையில் இருந்து விமானத்தை பிடித்து டெல்லிக்கு பறந்தார் செங்கோட்டையன்.
டெல்லி புறப்படுவதற்கு முன்பு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “மன அமைதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்” என்று அவர் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், டெல்லி சென்றதும் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது குறித்துப் பேசியதாக தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சந்திப்பை டெல்லியிலிருந்து திரும்பியதும் செங்கோட்டையன் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். அத்துடன், டெல்லிக்குச் சென்றதன் நோக்கம் பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கவே என்றும், குறிப்பாக, ஈரோடு–ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்கக் கோரி மத்திய அமைச்சர்களைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தபோது, அது பலரது புருவங்களையும் உயர்த்தியது.
டிவிட்டரில் ரயில்வே அமைச்சரை டேக் செய்து ஒருபதிவு போட்டால், இந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்கப் போகிறது; இதற்காக விமானத்தில் டெல்லிக்கு போய் கோரிக்கை விடுத்ததாக செங்கோட்டையன் சொல்வடெல்லாம், காதில் பூ சுற்றும் வேலை என்று விமர்சனங்கள் எழுந்தன.
செங்கோட்டையனின் இந்த நகர்வுகள், பா.ஜ.க.வின் பின்னணியில் அவர் செயல்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. குறிப்பாக, துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை, இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின் முதல் வரியிலேயே, “இன்றைய உலகத் தலைவர்களில் முதன்மையானவராகத் திகழும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்தியத் திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராகத் திகழும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களாலும் முன்மொழியப்பட்டவர் சி.பி. ராதாகிருஷ்ணன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது, அ.தி.மு.க. தொண்டர்களுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எம்.ஜி.ஆர். காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், தனது அரசியல் அறிக்கையில் பா.ஜ.க. தலைவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அ.தி.மு.க.வின் அடையாளங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைப் பின்னுக்குத் தள்ளியது, அவரது விசுவாசத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசிகளான அவரது ஆதரவாளர்கள், “செங்கோட்டையன் காவியை அணியாதது மட்டுமே மிச்சம், அவர் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளார்” என்று பேசி வருவது, அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அவருக்கு இருந்த ஆதரவும் அனுதாபமும், தற்போது அதிருப்தியாக மாறியுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்? அ.தி.மு.க.வின் ஒற்றுமைக்காக அவர் தொடர்ந்து போராடுவாரா, அல்லது பா.ஜ.க.வின் வியூகத்தில் ஒரு பகுதியாகச் செயல்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் விஸ்வாசி, நம்பிக்கைக்குரிய அதிமுக தொண்டர் என்றெல்லாம் அறியப்பட்ட செங்கோட்டையன், இப்படி காவிச்சாயம் பூசித் திருகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். செங்கோட்டையன் தனது அரசியல் வியூகத்தை மாற்றிக் கொள்வாரா; அல்லது பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவாரா என்பதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.





