--- --:--:-- --

சென்னை உட்பட இந்தெந்த இடங்களில் இன்று மழை..!

2

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், மழையின் போது 50 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதேபோல, கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதனிடையே, அடுத்த 3 அல்லது 4 நாட்களில் மத்திய வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வீசிய சூறைக்காற்றால் மரங்கள் பேயாட்டம் ஆடின.

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கார்மேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் கோடை மழை கொட்டியது. இதே போல, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட இடங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

 

கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஓசூர், தளி, சூளகிரி, உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் 2-ஆவது நாளாக மழை பெய்தது.இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் 100-ஏக்கருக்கு மேலான விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

 

இதே போல, கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டம்பட்டி, எல்லப்பாளையம், கெம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon