அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ரொக்கப் பரிசு வழங்கும் விழா..!
திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர், பெரியார் காலனியில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் சாமிநாதபுரம் துவக்கப்பள்ளி, பெரியார் காலனி, அனுப்பாளையம் புதூர் நடுநிலைப் பள்ளிகள், அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருமுருகன்பூண்டி, பெரியாயி பாளையம் துவக்கப்பள்ளிகள், மற்றும் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடிக்கு மாணவ மாணவிகளுக்கும், அதே போல் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்க பரிசு வழங்கி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 34 வது ஆண்டாக கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான ரொக்கப் பரிசு வழங்கும் விழா அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி அறிவியல் ஆசிரியை கவிதா வரவேற்றார்.
தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும், 400 மதிப்பெண்களுக்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் ருத்தரராஜ், தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் இளங்கோ, சங்கர், சென்னியப்பன் ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசினை வழங்கினார்கள்.
முடிவில் ஆசிரியர் நித்திய லட்சுமி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து மற்ற 6 பள்ளிகளில் நடந்த விழாக்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் 7 பள்ளிகளில் நடந்த விழாவில் 610 மாணவ, மாணவிகளுக்கு ரூ 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 மதிப்பிலான ரொக்கப் பணப்பரிசு வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




