திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது மின்இணைப்பு துண்டிப்பு!
ரயில்வே தொழிற் சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் விசிக தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு, தெற்கு ரயில்வே அலுவலகத்தில் வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்துகொண்டு, விடுதலை சிறுத்தைகளின் ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நட்சத்திர சின்னத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.அவர் பேசிக் கொண்டே இருந்த பொழுது ஸ்பீக்கருக்கு கொடுத்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் திருமாவளவன் தனது உரையை சிறிது நேரம் நிறுத்த நேரிட்டது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் சங்க நிர்வாகிகள் கோஷமிட்டு பிரச்சனை எழுப்பினர், பின்னர் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டு திருமாவளவன் கூட்டத்தில் பேசி முடித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




