ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோவிலில் விமர்சையாக நடந்த மண்டலபிஷேகம் !
கீழக்கோட்டை பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கீழக்கோட்டையில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் ஆலயம் உள்ளது. மதுரை அழகர்மலையில் உள்ள, 18ம்படி கருப்பர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து, இங்கு ஆலயம் அமைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. அ.கீழக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் ஆலயம், மிகவும் சக்தி வாய்ந்தது; சிறப்பு பெற்றது.
பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாகத் திகழும் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த செப்டம்பர் 8ம் தேதி விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள், வாண வேடிக்கை, முளைப்பாரி ஊர்வலம் என்று கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பயபக்தியுடன் பங்கேற்று, ஸ்ரீ கருப்பரின் அருளை பெற்றனர்.

இதை தொடர்ந்து கீழக்கோட்டை பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, மண்டல பூஜை விமர்சையாக நடைபெற்றது. 17 நாட்களுக்கு தினமும் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தில் பக்தர்கள் காணிக்கை தந்து சிறப்பாக நடத்தினர். மண்டலாபிஷேகத்தில் கணபதி ஹோமம், காயத்திரி ஹோமம், நவகிரக ஹோமம், கருப்பர் மூல மந்திரம், சப்த கன்னிமார்களுக்கு காயத்ரி ஹோமம் நடைபெற்றது.
மண்டலாபிஷேகத்தின் நிறைவாக பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 7 வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள், கோவில் குருக்கள் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய காளிக்கு பிறந்த மகள்கள் பொங்கலிட்டு, கோழி, முட்டைகள் வைத்து வழிபாடு செய்தனர்.

பின்னர், முன்னோடியான் பலிபீடம் பின்பு கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பொதுக் கிடாய்க்கு மஞ்சள் நீர் ஊற்றி பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த கிடாய், கோழி, சேவல்கள் பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
அதன் பிறகு, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பூசாரி முத்துவிற்கு அருள்வந்தது; கருப்பருக்கு மேற்கு பகுதியில் எரிசொரு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து சாமிக்கு மாகாதீபா ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து தரப்பட்டது. மேலும் அன்றைய தினத்தில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பதினெட்டாம்படி கருப்பர் அருளாசியால் கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து மண்டலாபிஷேகமும் சிறப்பாக நடந்து முடிந்திருப்பது, பக்தர்களுக்கு மன நிறைவைத் தந்துள்ளது.

மண்டலாபிஷேகம் முன்தினம் இரவு மாவிலங்கை கும்மிக்குழு சாா்பில், ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா காந்தி ஏற்பாட்டில், மாபெரும் கும்மியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் சிறுவா்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அழைக்கட்டுமா..ஆத்தா..அழைக்கட்டுமா.. பாடல் மற்றும் கருப்பசாமி… பாடல்களை கலைஞர்கள் ஆக்ரோசமாக வர்ணித்து பாடினர். அப்போது பக்தர்களுக்கு அருள்வந்து சாமியாடி பக்தி பரவசம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




