தம்மைப் பற்றிய “ஆர்டிஐ” கேள்விகளுக்கு பதிலளிக்க சசிகலா எதிர்ப்பு… கர்நாடக சிறைத்துறையும் சம்மதம்!!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தம்மைப் பற்றிய தகவல்களை அளிக்க சசிகலா எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சிறைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை ஏற்றுள்ள சிறை நிர்வாகம் சசிகலா பற்றிய தகவல்களை கேட்டு மனு செய்திருந்த சமூக ஆர்வலர் ஒருவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹைலைட் சமாச்சாரமே சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது பற்றியது தான். சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு, 2021 ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் ஏற்கனவே பதில் அளித்திருந்தது. மேலும் அபராதத் தொகை ரூ.10 கோடியை செலுத்தாத பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் சிறைத்துறை பதிலளித்திருந்தது.

சிறைத்துறையின் இந்தப் பதிலால், சசிகலா விடுதலை குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் முன் கூட்டியே விடுதலை ஆகக் கூடும் என்ற பேச்சுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில், தம்மைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, சம்பந்தமே இல்லாத 3-வது நபருக்கு தம்மைப் பற்றிய தகவல்களை தரக்கூடாது என சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற நரசிம்ம மூர்த்தி, மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்தார். ஆனால் தற்போது சசிகலாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






