டியூஷன் எடுத்து சம்பாதித்த ரூ.1 லட்சம் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கி,பாராட்டுகளை பெற்று வரும் கோவை கல்லூரி மாணவி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாகவே நோய்த்தொற்று 50,60 என இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.

 

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல கால அளவினை அரசு அறிவித்துள்ளது.ஊரடங்கினால் கூலி வேலைக்கு செல்வோர்,தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலைக்கு செல்ல முடியவில்லை.மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து தங்கு,தடையின்றி வழங்கி வருகிறது.

 

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்காக நிதியினை வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது.தொழிலதிபர்கள்,தன்னார்வலர்கள்,மாணவர்கள் என பல தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்கி வருகின்றனர்.இதுவரை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக சுமார் ரூ.306.42 கோடி வந்துள்ளது.மேலும்,அரசியல் கட்சியினரும்,தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில் இன்று கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கீரணத்தம் பத்தகாரன் தோட்டம் பகுதியை சேர்ந்த அனுஸ்ரீ என்பவர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து வழங்கினார்.

 

அனுஸ்ரீ கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.ஏ. படித்து வருகிறார்.மேலும்,தனது சொந்த சேமிப்பு மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த பின் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக பள்ளி,கல்லூரி மாணவர்கள் நிதியினை தொடர்ந்து அளித்து மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாமும் இதனை பின்பற்றலாமே ?


Leave a Reply