இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு புதிய முறையை அறிவித்தது. இப்படி சிறு வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும், பல மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் சூழல் உருவாகும் என கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசும் இந்தாண்டே 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என அறிவித்தது. தேர்வு நடத்தப்பட்டாலும், மாணவர்கள் யாரையும் பெயிலாக்க மாட்டோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்கள் தொடர்பாக தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பிய சுற்றறிக்கை மாணவர்களையும், பெற்றோர்களையும் கதிகலங்க செய்து விட்டது. அதாவது 5 மற்றும் 8-ம் வகுப்பில் 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும், வேறு ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி விட்டனர். தற்போதைய நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதே அரிதாகி விட்டது. பல அரசுப் பள்ளிகளில் வகுப்பு ஒன்றுக்கு 10 மாணவர்கள் தேறுவதே கடினம். இந்நிலையில் பொதுத்தேர்வே வேண்டாம் என கூறும் போது, அதனை கட்டாயமாக்கி இப்போது வேறு பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.10 வயது 13 வயது மாணவர்கள் வேறு ஊரில், வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத முடியுமா? பெற்றோருக்கு தானே சிரமம்? என எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், கல்வித் . துறை அதிகாரிகள் போட்ட இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கே தெரியவில்லை என்பது தான் உச்சக்கட்ட சோகம். பொதுத் தேர்வு மையம் குழப்பம், சுற்றறிக்கை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது இந்த விஷயம் அம்பலமானது.அப்படி ஒன்றும் இல்லையே? என மழுப்பி மறுத்த அமைச்சர் செங்கோட்டையன், உடனே கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மாணவர்கள் இருந்தால் கூட அதே பள்ளியில் தான் தேர்வு நடைபெறும். இது தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறையில் இது போல் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையேயான உரிய புரிதல் இல்லாத நிலை கடந்த 2 ஆண்டுகளாகவே நீடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட, பொதுத் தேர்வு பயம் தொடர்பாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தைப்பொங்கல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொங்கல் விடுமுறை நாளில் பள்ளிகளில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை விட, அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அமைச்சருக்கும் அந்த உத்தரவு பற்றி முன்கூட்டி தெரிவிக்கப்படவில்லை. கடைசியில் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை, வீட்டிலிருந்தே பிரதமர் உரையை கேட்கலாம் எனக் கூறி அமைச்சர் செங்கோட்டையன் சமாளித்தார். இதனால் பிரதமர் உரையாடல் நிகழ்ச்சியே வேறு தேதிக்கு மாற்றப்பட்டது என்பது தனிக்கதை.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பு விஷயத்தில், கல்வித்துறை அதிகாரிகள் நடத்தும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கதிகலங்க செய்துள்ளது.






