அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை தெறிக்க விட்ட “ராவணன்” காளை!!

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் ராவணன் என்ற காளை, களத்தில் பல நிமிடங்களாக சுழன்றடித்து, பிடித்துப் பார் என சவால் விடும் வகையில் மிரட்ட, வீரர்களோ மிரண்டு போய் ஓடி ஒளிந்தனர்.

 

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப் புகழ் ஜல்லிக்கட்டில், தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தில் விஐபிக்கள் பலரும் வளர்க்கும் காளைகளும் அடங்கும்.

 

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன், சின்ன கொம்பன் என்ற காளைகளும் கெத்தாக துள்ளி விளையாடி, யாருக்கும் பிடிபடாமல் வீரர்களை மண் கவ்வச் செய்தன.

 

இதே போல், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா என்பவரின் ராவணன் என்ற ஜல்லிக்கட்டுக்காளை, பார்வையாளர்களிடம் எக்கச்சக்கமாக வரவேற்பை பெற்றது. இந்த ராவணன் காளை, நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 10 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்று வீராவேசம் காட்டியதை யாராலும் மறக்க முடியாது .அந்த அளவுக்கு திமிலை சிலுப்பியபடி கிட்ட வரும் வீரர்களை விரட்டி விரட்டி மிரட்டியது. இதனால் மிரண்டு போன ஒத்து மொத்த வீரர்களும், மிரண்டு போய் உயிர் பயத்தில் தடுப்புக் கம்பிகளை பிடித்து தொங்கிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக தனியொருவனாக களத்தில் கெத்து காட்டி கொம்பை சுழற்றி மிரட்டல் விடுத்த ராவணனை கடைசி வரை யாராலும் நெருங்க முடியவில்லை. கடைசியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான பரிசையும் தட்டிச் சென்ற ராவணன் காளையின் புகழ் ஒரே நாளில் ஓகோ என பரவியது.

 

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும், அடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர், அனுராதாவின் ராவணன் காளை வருகிறான் என மைக்கில் அறிவித்தது தான் தாமதம்; இன்றைக்காவது திமிலை பிடித்து விட வேண்டும் என வீரர்கள் முண்டியடித்தனர். ஆனால் வீரர்கள் மத்தியில் நாலுகால் பாய்ச்சல் காட்டிய ராவணன், தன் திமிலை பிடித்த வீரர் ஒருவரை திமிலை சிலுப்பி தூக்கி வீசிவிட்டு களத்தில் ஆக்ரோஷம் காட்டியது. இதனால் அவனியாபுரம் போன்று இங்கும் வீரர்கள் ஓடி ஒளிந்தனர்.கடைசி வரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு பல நிமிடங்கள் களத்தில் சுற்றி வந்த ராவணனின் தீரத்தை பாராட்டி பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ராவணன் போன்றே மேலும் பல காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத காளைகளாக வீராவேசம் காட்டின.


Leave a Reply