சபரிமலை வழக்கில் விசாரணை, விவாதங்கள் கிடையாது.! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது விசாரணை, விவாதம் நடத்தப்படாது என்றும், 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகள் குறித்து மட்டுமே 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொள்ளும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலை செல்ல முயன்ற இளம் பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் கடந்தாண்டு சபரிமலை சீசனின் போது, கோயில் வளாகமே போர்க்களமானது.

மேலும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பில் மறு சீராய்வு மனுக்கள் ஏராளமாக தாக்கலாகின. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற சில நாட்கள் இருந்த போது இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்காமல் வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். அத்துடன் இந்து மதத்தினர் மட்டுமின்றி முஸ்லீம் மற்றும் பார்சி மதத்தை சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த புனித இடங்களில் அனுமதி மறுக்கப்படும் விவகாரம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளை எழுப்பியிருந்த கோகாய், அது குறித்தும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடங்கியது. இந்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், மறு சீராய்வு மனுக்கள் மீது விசாரணையோ விவாதங்களோ நடத்தப்படாது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு எழுப்பிய கேள்விகள் குறித்து மட்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply