கோவை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக சாந்திமதி போட்டியின்றி தேர்வு. மொத்தம் உள்ள 12 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியது.
நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12 இடங்களையும்,திமுக 5 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. மேலும்,155 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 90 இடங்களையும், திமுக 56 இடங்களையும், சுயேட்சைகள் 9 இடங்களையும் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மாவட்ட குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.இதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் சூலூர் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் சாந்திமதி போட்டியின்றி ஒருமனதாக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாந்திமதி அதிமுக சூலூர் ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார்.மேலும், இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவைச்சேர்ந்த நர்மதா துரைசாமி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். காரமடை ஒன்றிய குழுத் தலைவராக மணிமேகலை போட்டியின்றி தேர்வு, அன்னூர் ஒன்றியக்குழு தலைவர் ஆக அம்பாள் பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தலைவராக விஜயராணி போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார். கிணத்துக்கடவு ஒன்றிய குழுத் தலைவராக நாகராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தொண்டாமுத்தூர் ஒன்றிய குழுத் தலைவராக மதுமதி விஜயகுமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய குழுத் தலைவராக கவிதா 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சூலூர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜி பாலசுந்தரம் 8 வாக்குகள் பெற்று மீண்டும் ஒன்றிய குழு தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். சுல்தான்பேட்டை ஒன்றிய குழு தலைவராக ரத்தினம் ஏழு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனைமலை ஒன்றியக்குழு தலைவராக சாந்தி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மதுக்கரை ஒன்றிய குழு தலைவர் ஆக உதயகுமாரி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லட்சுமி என்பவர் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் அதிமுகவினர் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.






