காவலாளியின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாய் உயிரிழப்பு

நெல்லையில் வீட்டின் காவலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுக்கவிடாமல் பாச போராட்டம் நடத்திய நாயும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் பெருமாள் புரத்தில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் என்பவர் திடீரென வீட்டின் வெளியே இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர் பராமரித்து வந்த நாய் அவரது உடலை பல மணி நேரம் சுற்றி வந்தது. காவலாளி திடீரென உயிரிழந்தது தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள வந்தனர்.

 

ஆனால் நாய் பாசப்பிணைப்பால் பன்னீர்செல்வத்தை விட்டு நகர மறுத்தது. பின்னர் காவல்துறையினர் கயிற்றை கொண்டு நாயை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நாயின் கழுத்தில் கட்டிய கயிறு இறுகி நாய் பரிதாபமாக உயிரிழந்தது. காவல்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காவலாளிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பிரேத பரிசோதனையில் அவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது தெரியவந்தது. காவலாளியின் உடலை எடுக்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்திய நாயும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply