மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவியேற்றுள்ள தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜீத் பவார் பக்கம் எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 4 எம்எல்ஏக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வருவதால், பட்னாவிஸ் அரசு தப்புமா? அல்லது இன்னும் ஏதேனும் அதிசயம் நிகழுமா? என்ற ரீதியில் அம்மாநில அரசியல் நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பாகி கிடக்கிறது.
மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரசின் சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவாரை நம்பி, பாஜக அவசர அவசரமாக ஆட்சி அமைத்து விட்டது.. திரைமறைவில் ரகசிய பேச்சு நடத்தி, முதல்வராக பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் தடாலடியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாகவே அம்மாநில அரசியல் களத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து கணிசமான எம்எல்ஏக்களை அஜித் பவார் லபக் செய்து விடுவார் என்று நம்பியே, ஆட்சியமைக்கும் முடிவை பாஜக அதிரடியாக மேற்கொண்டது. ஆனால் அஜித் பவாரின் நம்பிக்கைத் துரோகத்தால், சரத் பவார் வெகுண்டெழ ,தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அஜித் பவார் பக்கம் அணி மாறுவதை தடுத்து நிறுத்திவிட்டதாகவே கூறப்படுகிறது. அதே போல், பதவியேற்பின் போது அஜித் பவார் உடன் இருந்த 11 எம்எல்ஏக்களில் 8 பேர் வரை மீண்டும், தேசியவாத காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் அஜித் பவாரை நம்பி மோசம் போய் விட்டதாக பாஜக தரப்பில் புலம்பல் இருந்தாலும், எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சிகளை இன்னமும் மேற்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.
தற்போதைக்கு அஜித் பவார் பக்கம் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தங்கள் கட்சியின் 54 எம்எல்ஏக்களில் 50 பேர் தங்கள் பக்கமே உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் உறுதி படத் தெரிவித்துள்ளார். சிவசேனாவும், காங்கிரசும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை நட்சத்திர ஓட்டலில் பத்திரமாக தங்க வைத்துள்ளனர்.
இதனால் பட்னாவிஸ் அரசு தப்பிப் பிழைக்குமா? என்ற கேள்வி தான் மகாராஷ்டிரா அரசியலில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் பட்னாவிசை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கடிதம், அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்த கடிதம் போன்றவற்றை தாக்கல் செய்ய ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், பட்னாவிஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. இதனால் சட்டப்பேரவையால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த குறைந்த அளவு காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயிக்கும் பட்சத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியுமா? அல்லது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமா? என்று இன்றே தெரிந்துவிடும் என்று தெரிகிறது.