போனில் முத்தலாக் செய்ததை போலீசில் புகார் செய்த பெண்ணின் மூக்கு அறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.
குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் போன் மூலம் தலாக் என மூன்று முறை சொல்லி விவாகரத்து செய்துவிட்டார்.தொடர்ந்து அந்த பெண் இதுகுறித்து, போலீசாரிடம் போன் மூலம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் இரு வீட்டாரும் வரவழைக்கப்பட்டு காவல்நிலையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பலனளிக்கவில்லை தொடர்ந்து போலீசார் முத்தலாக் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அந்த பெண் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கணவரின் உறவினர்களால் அவரது மூக்கு அறுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த பெண் அடி, உதைக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து கேட்கச்சென்ற அந்த பெண்ணின் தாயாரை கல்லால் அடித்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






