திருச்சியில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி ஹாஸ்டல்!

பதின்வயதில் பள்ளி மாணவணோ மாணவியோ, தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர ஆரம்பிக்கும்போது முதலில் அவர்களை வெறுத்து ஒதுக்குவது பெற்றோரும், நண்பர்களும்தான். மத, ஜாதி அடிப்படையில் மனிதனை பிரித்துப் பார்த்து உயர்வு தாழ்வு கொள்ளும் மனிதனிடம், மூன்றாம் பாலினத்தவரையும் சக மனிதனாக அரவணைக்கும் பேரன்பை எதிர்பார்ப்பதுதான் எவ்வளவு பெரிய வன்முறை? இவ்வாறு வெறுத்து ஒதுக்கப்படும் மூன்றாம் பாலின பதின்வயதுகாரர்களுக்கு வேறு போக்கிடம் என்ன? சட்டமீறல்கள், தவறான வழிகாட்டல்கள்தான்.

 

சொந்த வீட்டிலிருந்தே விரட்டப்படும்போது பள்ளிக்கூடங்கள் பற்றி சொல்லவா வேண்டும்? ஆனால், இனிமேலும் அந்தக் கொடுமை நடக்காது என நம்பலாம். காரணம், திருச்சி ஸ்ரீ சிவானந்தா பாலைய்யா பள்ளி. இப்பள்ளியில் மூன்றாம் பாலினத்தவருக்கென்றே தனியாக 40 பேர் தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தர இருக்கிறது. மூன்றாம் பாலின மாணவர்களை நடத்துவிதம் குறித்து ஆசிரியர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது.

ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாபுதான் இப்பள்ளியின் சேர்மன். ஏற்கெனவே இப்பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள 100 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெற்றோரால் தவிக்க விடப்படும் மூன்றாம் பாலினத்தவரை முறையாக கையாண்டால், அவர்களையும் சமூகத்தில் முக்கிய அங்கத்தினராக மாற்றமுடியும் என்கிறார் பாபு.


Leave a Reply