இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல்!இதனால் போலீசார் குவிப்பு !

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள முகிழ்தகம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் அஜித்குமார் (23). இவர் தொண்டியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டிரைவராக வேலை செய்து வந்தார். தினமும் இவர் ஆட்டோ மூலம் கடைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பல்க் உரிமையாளரிடம் ரூ.3 ஆயிரம் வாங்கிக்கொண்டு கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

 

இந்நிலையில் நேற்று காலை நம்புதாளை மஞ்சள்கரிச்சான் ஊருணிக்குள் தலை, கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் அஜித்குமார் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து நம்புதாளை கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்கண்ணன், தொண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருவாடானை தாசில்தார் சேகர், காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், தொண்டி போலீஸ் எஸ்.ஐ., காமாட்சிநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அஜித்குமாரின் கைகள் பின்புறமாக மர்ம நபர்கள் கட்டி வைத்ததற்கான அடையாளம் இருந்தது. கொடூரமான முறையில் தலை, கழுத்தில் வெட்டி கொலை செய்து, அவரது உடலை சிறிது தூரம் இழுத்து சென்று விட்டுச் சென்றது தெரிந்தது.அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

அஜித்குமார் தந்தை கருப்பையா புகாரில் தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமார் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவாடானை டிஎஸ்பி சமரசத்தை ஏற்காமல் போராட்டம் தொடர்ந்தது. இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் களமிறங்கினர்.

விசிக ., தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மாநில துணை செயலாளர் கிட்டு, மாவட்ட துணை செயலாளர் தேனமுதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் செல்லக்கண்ணு, கந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி, அகில இந்திய மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கண்ணகி, விசிக ., ஊடகத் தொடர்பாளர் சத்யராஜ் உள்ளிட்டோரிடம் மீண்டும் தொடர்ந்த சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. கொலையாளிகளை விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அஜித்குமார் உடலை நாளை பெற்றுக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.


Leave a Reply