சத்திரக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வருபவர் நாகராஜ் (52). இவர், அலுவலக துப்புரவுப் பணியாளரிடம், வலுக்கட்டாயமாக சில்மிஷம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவுகிறது.
அலுவலகத்தில் காலை நேரத்தில் துப்புரவுப்பணி செய்ய வரும் பெண்ணை இழுத்து, கட்டிப்பிடித்து நாகராஜ் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். அவரிடம் இருந்து விடுபட முயற்சிக்கும் அந்த பெண்ணை வலுகட்டாயமாக கட்டிப்பிடிக்கிறார்
இதை ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்த பெண் ஊழியர், நாகராஜிடம் இருந்து விடுபட முயல்கிறார். நாகராஜூம் படம் எடுக்க வேண்டாம் என்று தடுக்கிறார்.நாகராஜை தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயலும், பெண் ஊழியரை மீண்டும், மீண்டும் இழுத்து நாகராஜ் கட்டிப்பிடிக்கிறார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்த பெண் நாகராஜின் பிடியில் இருந்து தப்பி வெளியேறுகிறார். இதனை படம் பிடித்தவர் அப்படியே வாட்ஸ்அப்பில் பதியவிட, மாவட்டம் முழுவதும் தற்போது இந்த வீடியோ வைரலாகி விட்டது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையையே நாகராஜின் செயல் காட்டுகிறது. இதுபோல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மாதிரியான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சபலபுத்தி கொண்டவர்களுக்கு பாடமாக இருக்கும்’’ என்றனர்.