நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து மதுரையில் வேடிக்கை போஸ்டர்

கடந்த 4 நாட்களாகவே சமூக வலைதளங்களை “பிரே பார் நேசமணி” என்ற ‘ஹேஷ்டேக்’ ஆக்கிரமித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2001-ம் ஆண்டு வடிவேலு நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சியாகும்

 

2 நாட்களுக்கு முன்பு முகநூலில் சுத்தியல் படத்தை வெளியிட்டு இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்? என பதிவிடப்படிருந்தது.

 

இதை பார்த்த துபாயில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரபாகர் என்பவர் வேடிக்கையாக, “இதற்கு எங்கள் ஊரில் சுத்தியல் என்று பெயர். இந்த சுத்தியல் காண்டிராக்டர் நேசமணி தலையில் விழுந்ததால்தான் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” என்று ‘பிரண்ட்ஸ்’ படத்தை நினைவுபடுத்தி பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, யார் அந்த நேசமணி? நேசமணி உடல்நலம் பெற பிரார்த்திக்கிறோம் என பலர் பதிவிட்டனர். ‘பிரே பார் நேசமணி’ டிரெண்டிங் உலக அளவில் பரவியது. முக்கிய பிரமுகர்களும் நேசமணிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டிருந்தனர்.

 

இந்த டிரெண்டிங் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர்கள் வடிவேலு புகைப்படத்தை பயன்படுத்தி வேடிக்கையாக பல மீம்ஸ்களை தயாரித்து இணையத்தில் உலவவிட்டனர். இதுவும் டிரெண்டிங்கானது.

 

இந்த நிலையில் நேசமணியை (வடிவேலு) தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை (ரமேஷ்கண்ணா) கண்டித்து வேடிக்கையாக மதுரையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் பார்ப்போரையும் சிரிக்க வைக்கிறது.

 

அந்த போஸ்டரில், “பாசமும், நேசமும் நேசமணிக்கே… குமுறுகிறது உலகம். ‘பாஸ்’ நேசமணியே எங்கள் பாசமணியே. அப்ரசெண்டிகளின் ஆதரவே எழுந்து வா சூனா பானாவே…..உன்னை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டிக்கிறோம்” என்ற வேடிக்கை வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


Leave a Reply