சூலூர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறு..விறு..

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இத்தேர்தலில் வயதானவர்கள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

 

சூலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில்கருமத்தம்பட்டி மரியன்னை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 116 வது வாக்குசாவடியில் வாக்குபதிவு எந்திரம் பழுதானதால், வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.அதைப்போல்,மாதிரி வாக்குப்பதிவின் போது இயந்திரத்தின் பொத்தான்கள் வேலை செய்யவில்லை.அரைமணி நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.

 

அதனைப்போல், இடைத்தேர்தல் நடைபெறும் கண்ணம்பாளையம் 169 வது வாக்குசாவடியில் வாக்குபதிவு எந்திரம் பழுதானதால் வாக்குபதிவு நிறுத்தம்.அரைமணி நேரத்திற்கு பின்பு வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இருகூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார்.

 

எனினும்,அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி வாக்குச்சாவடிக்குள் கட்சிக்கொடி பொருத்திய வாகனத்தில் வந்தும்,அதிமுக துண்டும் அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தேர்தல் நடக்கும் காலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள் வரும் பொழுது தங்களது கட்சி சார்பான துண்டோ,கொடிகளோ,கொடிகள் பொருத்திய வாகனங்களில் வரக்கூடாது.

 

அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வதம்பச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.அப்போது,தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி கட்சிக்கொடி பொருத்திய வாகனத்தில் வாக்குச்சாவடிக்குள் வந்ததும்,அதிமுக கட்சித்துண்டையும் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

காலை 9 மணி நிலவரப்படி சூலூர் சட்டமன்றத்தொகுதியில் 14.40 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.


Leave a Reply