கோவை அருகே, வனப்பகுதியில் யானை தாக்கி, 79 வயது மூதாட்டி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள், வயது 79. வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதியினர், சப்தமிட்டும், பட்டாசுகளை வெடித்தும் காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி அடித்தனர். இது குறித்து கோவை வனச்சரகர் சுரேஷுக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோவை வனக்கோட்டத்தில் கோவை,பெரியநாயக்கன் பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 6 வனச்சரகங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில், யானை தாக்கி, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனப்பகுதிக்குள்ளேயே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.