தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி பதவி கிடைக்குமா?

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான கனிமொழி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
தலைவர் கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க.வை வழிநடத்தி சென்றதுடன் ஒவ்வொரு தி.மு.க. உறுப்பினரோடு கலந்து இருந்தார். அவர் ஒரு வலுவான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நான் மட்டும் அல்ல, எனது சகோதரரும் தலைவர் இல்லாமல் ரொம்பவே தவிக்கிறோம்.

என்னிடம் எப்போதும் தலைவர் வெளிப்படையாக பேசுவார். அரசியலை விட மற்றவற்றை அதிகமாக பேசுவார். அவரோடு உணர்ச்சி பூர்வமான பந்தம் இருந்தது. குறிப்பிட்ட வயது வரும் நேரத்தில் எல்லோருமே பெற்றோரை இழக்க வேண்டியது உள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் எப்படி பேச வேண்டும் என்பதில் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஆலோசனை சொல்வார். அவர் இல்லாததால் இதை இழக்கிறேன்.

ஆனால் இப்போது அந்த இடத்தில் எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் இருந்து வழிகாட்டுகிறார். எனக்கு சில சந்தேகங்கள் வரும்போதும், ஆலோசனைகள் தேவைப்படும்போதும் அவர் உதவுகிறார்.

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் இருந்து பெண் மந்திரி நியமிக்கப்படுவாரா? என்பது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. பல கட்சிகளும், பெண் வேட்பாளரை நிறுத்தி உள்ளன. அவர்களில் ஒருவர் மத்திய மந்திரி ஆகலாம். இதுபற்றி இரு கட்சி தலைவர்களும் முடிவு செய்வார்கள்.

எனது மகன் பள்ளி கல்வியை முடித்து விட்டான். 2ஜி வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது. இந்த இரு வி‌ஷயங்களும் எனது நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டன. மேலும் கட்சி பணியில் பாராளுமன்ற பணிகளும் இருந்தன.

இப்போது மக்களுக்கு பணியாற்ற அதிக நேரம் கிடைத்துள்ளது. இதை உகந்த நேரமாக கருதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். எப்போது நான் அரசியலுக்கு வந்தேனோ அப்போதில் இருந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது.

இது சம்பந்தமாக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கூறும்போது, இது வித்தியாசமானதாக இருக்கும். விரும்பினால் போட்டியிடலாம் என்று கூறி இந்த வாய்ப்பை அளித்தார். உரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

எனது தாயார் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால்தான் நான் தூத்துக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுவதற்கு எதிர்க்கட்சி வேட்பாளர் தமிழிசை பதில் கூறி இருக்கிறார்.

என்னை எந்த சாதியையும் சாராதவர் என்று அவரே கூறி இருக்கிறார். இப்படி அவர் சொன்னதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தந்தையோ, எனது சகோதரரோ எந்த சாதிக்காகவும் பிரதிநிதியாக இருந்தது இல்லை. அப்படி இருக்க நான் மட்டும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக எப்படி இருக்க முடியும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டும்தான் வேலைவாய்ப்புகளை தருவதாகவும், வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாகவும் கூற முடியாது. இங்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. பலவகையில் வளர்ச்சிகளை உருவாக்க முடியும். பலகோடி பனை மரங்கள் இங்கு உள்ளன. இதன் மூலம் பனை தொழிலை உருவாக்கலாம். ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தலாம். ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை மக்கள் இது செயல்படுவதை விரும்பாததால் அது இங்கு தேவை இல்லை.

நான் எம்.பி.யாக தேர்வானால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். துறைமுகம் மேலும் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவேன். தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன்


Leave a Reply