அதிமுக., பாஜக கூட்டணி கட்சிகள் இராமநாதபுரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர்., அருகே உள்ள பாஜக., தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செ. முருகேசன் (அதிமுக), முரளிதரன் (பாஜக), பாஜக., மாநில துணைத் தலைவர் குப்புராமு, தேமுதிக., மாவட்ட செயலாளர்கள் முனியசாமி (அதிமுக), சிங்கை ஜின்னா (தேமுதிக), அக்கீம் (பாமக) ஆகியோர் பேசினர்.
அன்வர் ராஜா எம்.பி ., பேசுகையில், அதிமுக., அரசிற்கு சட்ட சபையில் அருதி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக., 15 தொகுதிகளை வென்றாக வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் பாஜ., அரசு மீண்டும் தொடர அதிமுக., முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்றார். மணிகண்டன் பேசியதாவது: இராமநாதபுரம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்வது போல், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற பாஜக.,வை வெற்றி பெறச் செய்ய கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட்டு வெற்றியை மட்டும் இலக்காக கொள்வோம்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, டீ கடை உரிமையாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராகி விட்டனர்.
முதல்வராகும் யோக ஜாதகம் ஸ்டாலினுக்கு இல்லை.
திராவிட அரசியல் பாரம்பரியம் மிக்க ஸ்டாலினால் ஏன் முதல்வராக முடியவில்லை? இந்த தேர்தலுடன் ஸ்டாலின் அரசியலை விட்டு விலகி விடுவார். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக., பாஜக ., கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இராமநாதபுரத்தில் விமான நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி அமைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மூலம் அமைக்கப்படும். இலங்கை, இந்திய சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொல்லையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி – கன்னியாகுமரி இடையேயான ரயில் பாதை திட்டம் குறித்து விவரம் கோரப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக., வினர் வெற்றி வியூகத்தை நான் நன்கறிவேன். நீங்கள் (அதிமுக) நன்கு களப்பணியாற்றினாலும் பாஜக ., சின்னமான தாமரையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் ஆனி முத்து, மாவட்ட செயலர்கள் தர்வேஸ் (மீனவரணி), பால்பாண்டியன் (இளைஞர் பாசறை), சேதுபாலசிங்கம் ( ஜெ., பேரவை), மண்டபம் ஒன்றியச் செயலர் தங்கமரைக்காயர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நகர் துணை செயலர் ஆரிப் ராஜா நன்றி கூறினார்.


Leave a Reply