ராதாரவி சஸ்பெண்ட் என்பது திமுகவின் தேர்தல் ஸ்டண்ட்’…தமிழிசை தடாலடி…

‘நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசியது தொடர்பாக ராதாரவி மீது தி.மு.க. எடுத்திருக்கும் நடவடிக்கை என்பது அவர்களது தேர்தல் காலத்து ஸ்டண்ட்தான்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன்.

’’முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நயன்தாரா போன்றவர்களையெல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்’ என்று ‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் ராதா ரவி பேசியது பெரும் பரபரப்பாகியிருக்கிறது. ராதாரவியின் அந்தப் பேச்சுக்கு தமிழ் மட்டுமன்றி அனைத்து மொழி நடிகர் நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவரும், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,’நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அந்நாள் முதல்வர் முதல் கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் வரை பேசிய பேச்சுக்கள் அச்சில் ஏற்றமுடியாத தரம்? என்பதை நாடறியும்.ஜெ.அவர்களை சட்டமன்றத்தினுள்ளே அடித்து உதைத்தவர்கள்தான் திமுகவினர்.நீங்கள் செய்வது தேர்தல் காலத்து நாடகம் என்னபதை மக்கள் அறிவார்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார் தமிழிசை.


Leave a Reply