மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கடிதம் எழுதிய நயன்தாரா..!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நயன்தாரா போன்றவர்களையெல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்’ என்று ‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் ராதாரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும்.

சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply