`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்!’ – தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

`கோவையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால்தான் நமது மானம் மரியாதை காப்பாற்றப்படும்’ என்று அ.தி.மு.க தொண்டர்களிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்
கோவை நடாளுமன்றத் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பி.ஜே.பி. கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “மத்திய பி.ஜே.பி அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்திருக்கிறது. நாட்டிற்கான பாதுகாப்பைத் தர பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் ஜெயித்தவர்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். அ.தி.மு.க தொண்டர்களைப்போல உண்மையான விசுவசத்தோடு வேலை செய்ய முடியாது. தி.மு.க வெற்றிபெறும் என்கிற மாயை இருக்கிறது. அந்த மாயையை நாம் உடைக்க வேண்டும். தி.மு.கவும் காங்கிரஸும்தான் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளன. ஸ்டாலினால் எப்படித்தான் இப்படியெல்லாம் பேச முடிகிறதோ?. தி.மு.க தேர்தல் அறிக்கை காமெடியாக இருக்கிறது. ஸ்டாலினை வைகோவைவிட யாரும் கேவலமாக பேசியிருக்க முடியாது.

இந்த கூட்டணி உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களிலும் தொடரும்.தேர்தல் முடியும்வரை கூட்டணி கட்சியினர் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். தி.மு.க வெற்றிபெற குறுக்குவழியில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அ.திமு.க சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி. கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். கூட்டணி கட்சிக்குள்ளான பிரசனை குடும்பத்திற்குள் உள்ள அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை பிரச்னை போன்றது. கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகளை தேர்தலுக்குப் பிறகு பார்த்து கொள்வோம். இப்போது நம் எதிரியை தோற்கடிக்கப் பாடுபடுவோம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிபி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால்தான், நமது மானம் மரியாதை காப்பாற்றப்படும். மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ஆர்-ஐ நாம் வெற்றிபெற வைக்க வேண்டும் பொள்ளாச்சியிலும், நீலகிரியிலும் அ.தி.மு க உறுதியாக வெற்றி பெறும்’’ என்றார்


Leave a Reply