தே.மு.தி.க-வின் பெயரை அமைச்சர் வேலுமணி தே.தி.மு.க என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது
தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத, அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும், கருணாநிதி இருந்த வரை தலை காட்டாத தி.மு.க வாரிசுகளும் உளறிக் கொட்டும் காட்சிகள் தினம் தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சி தொகுதி சிட்டிங் எம்.பி மகேந்திரனுக்கு அ.தி.மு.க-வில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி, கோவை குறிச்சி அருகே நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் தாமோதரன் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.அப்போது எஸ்.பி.வேலுமணி, அங்கு வந்திருந்த அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களின் பெயரை, கூறி வரவேற்றுக் கொண்டிருந்தார். தே.மு.தி.க-வின் பெயரை சொல்லும் போது, தேசிய திராவிட முற்போக்கு (தே.தி.மு.க) கழகம் என்று கூறிவிட்டார். வேலுமணி பேசியதில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க பிரமுகர்கள் சிறிய ஜர்க்குடன் சிரித்துக் கொண்டே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று வேலுமணியிடம் கூறினர்.
அதிர்ச்சியான வேலுமணி, கையில் இருந்த பேப்பரை காண்பித்து, “இதில் தவறாக போடப்பட்டுள்ளது” என்று சமாளித்தார்.2011 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் என்று இரண்டு முறை கூட்டணி வைத்த கட்சியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறீர்களே அமைச்சரே என தொண்டர்கள் சிலர் பேசிச் சிரித்தனர்