`உங்கள் டிமாண்ட் என்ன?’ – அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்!

Publish by: --- Photo :


நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக வரும் ஏப்ரல் 25-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் வாரணாசி செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேருவை அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து அவரிடம் ஆலோசித்துள்ளார். அப்போது, “மொழி தெரியாத மாநிலத்திற்குச் செல்கிறீர்கள். வடநாட்டில் உங்களுக்குப் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் உஷாராக இருங்கள்” என கே.என். நேரு அட்வைஸ் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அய்யாக்கண்ணு, “விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டோம். கோவணத்தோடு டெல்லியில் கிடந்தோம். எலிக்கறி உண்ணும் போராட்டம், அரைநிர்வாணப்போராட்டங்கள் முன்னெடுத்தோம். பிரதமர் நரேந்திர மோடி எங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. எங்களை அழைத்து உங்கள் குறைகள் என்ன என்று கூட கேட்கவில்லை. எனவே தான் அவருக்கு எதிராகத் தேர்தலில் நிற்பது என முடிவெடுத்தோம். அவர் போட்டியிடுவதாக கூறப்படும் வாரணாசியில் ஏப்ரல் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். ஆனால் இந்த தகவல்கள் மத்திய உளவுத்துறைக்கு எட்டிவிட்டது. டெல்லியில் இருந்து அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டு பேசினர். உங்களுக்கு என்ன பிரச்னை எதற்காகப் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்கள் என்றனர். உங்கள் டிமாண்டை எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அதனைப் பூர்த்தி செய்து வைக்கிறோம் என்றார்கள்.

எங்களின் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் போராடும் போது வராத அதிகாரிகள் தற்போது எங்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்து வைப்பதாகக் கூறுகிறார்கள். நானும் எங்களது பிரதான கோரிக்கையான, விவசாய கடன் தள்ளுபடி, 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு பென்சன் தொகையாக மாதம் 5000 வழங்க வேண்டும், விவசாய பொருள்களை லாபகரமாகச் சந்தையில் விற்க அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது, நதிகள் இணைப்பு ஆகியவற்றைக் கூறினேன். அவர்களும் இதனைப் பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றினால் மோடிக்கு எதிராகத் தேர்தலில் நிற்கும் எனது முடிவை மாற்றிக்கொள்வேன்” என்றார்.


Leave a Reply