--- --:--:-- --

இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!

1

த்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது செய்தி அறிக்கையில், நடப்பு கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், இதில் 12,487 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 499 மாணவிகளும், 25 ஆயிரத்து 841 தனித்தேர்வர்கள் மற்றும் 273 சிறைவாசித் தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 15 ஆயிரத்து 729 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாளொன்றுக்கு சுமார் 48 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், தடையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon