அமெ.அதிபர் டிரம்ப்புக்கு என்ன ஆச்சு..? இந்தியாவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கும் பகிரங்க மிரட்டல்!!

கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலை தடுமாறத் தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. மருந்து, மாத்திரை கேட்டு இந்தியாவை மிரட்டிய டிரம்ப், இப்போது கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு மீது அபாண்ட பழியைப் போட்டு நிதியுதவியை நிறுத்தப் போவதாக பாய்ச்சல் காட்டியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகை அலறவிட்டுள்ள கொரோனா வைரஸ், இப்போது அமெரிக்காவை சுனாமியை விட மோசமாக வாரிச் சுருட்டி அந்நாட்டை நிலை குலையச் செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக தினசரி கொறோரை பாதிப்பும், உயிரிழப்பும் உலக அளவில் அமெரிக்காவில் தான் மிக மிக உச்சத்தில் உள்ளது. உலகின் மொத்த பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 4 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் நேற்று ஒரே நாளில் 1950 ஆகி மொத்த உயிரிழப்பு 12854 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை எடுத்துவரும் ஓரிரு வாரங்களில் பலமடங்காகும் என்பது நிச்சயம் என்பதை அதிபர் டிரம்ப்பே பதற்றத்துடன் கூறி வருகிறார்.

 

உலகின் மிகப் பெரும் வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திராணியில்லாமல் இப்போது பெரும் தள்ளாட்டத்தில் தடுமாறுகிறது. காரணம், நவீன போர் தளவாடங்களையும், அணு ஆயுதங்களையும் பெருமளவில் தயாரித்து, அதனை உலக நாடுகள் தலையில் வலுக்கட்டாயமாக திணித்தே பழக்கப்பட்டு விட்டது அமெரிக்கா. ஆனால் அந்நாட்டில் மருத்துவ வசதி மற்றும் மருந்து உற்பத்தியில் பெரும் கோட்டை விட்டதே இப்போதைய திண்டாட்டத்துக்கு காரணம்.

 

இதனால்,இப்போது லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்பில் உயிருக்கு போராட, போதிய வெண்டிலேட்டர்கள், உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் கைவசம் இல்லாமல் அமெரிக்கா பதற்றத்தில் உள்ளது. இதனால் தனது முக்கிய எதிரியாக கருதும் சீனாவிடமே உதவி கேட்டு கெஞ்சியதால், பாவ புண்ணியம் பார்த்து 1000 வெண்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை சீனா வழங்கியது.

 

அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மலேரியா நோயை குணப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை பயன்படுத்துகிறது அமெரிக்கா. இந்த மாத்திரையை முழுக்க முழுக்க சப்ளை செய்தது இந்தியாதான். ஆனால், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவுக்கு மாத்திரை சப்ளையை இந்தியா நிறுத்திவிட்டது.

 

ஆனால் அமெரிக்காவில் இப்போது இந்த மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட, முதலில் பிரதமர் மோடியிடம் மாத்திரையை கொடுத்து உதவுமாறு டிரம்ப் வேண்டுகோள் வைத்தார். ஆனால் மோடியோ செவிசாய்க்காததால், அடுத்த நாளே, மாத்திரை சப்ளை செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தக்க பதிலடி கொடுப்பேன் என மிரட்டல் விட்டு, இந்தியாவை பணிய வைத்து காரியத்தையும் இப்போது சாதித்து விபடார்.

 

அடுத்ததாக கொரோனா வைரஸ் இந்தளவுக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பரவியதற்கு உலக சுகாதார அமைப்பின் மீது பழியை போட்டுள்ளார் டிரம்ப் . சீனாவில் இந்த வைரஸ் பரவியபோது உலக நாடுகளை உஷார்படுத்தவில்லை. சீனாவில் நடந்த அனைத்தையும் நன்கு தெரிந்திருந்தும் மறைக்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு உண்மைகளை மூடி மறைக்கிறது. ஆரம்பம் முதலே சீனாவுக்கு சாதகமாகவே உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 

இதே போக்கு தொடர்ந்தால் இந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதியுதவியை அமெரிக்கா ஒட்டு மொத்தமாக நிறுத்த வேண்டி வரும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் ஐ.நா.சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க அதிபர் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.