“தேங்க்யூ இந்தியா!!” ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரை சப்ளை செய்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏகத்துக்கும் புகழாரம்!!

ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை மீண்டும் சப்ளை செய்ய முடிவு எடுத்ததற்காக இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வலிமை மிக்க தலைவர் என பிரதமர் மோடியையும் வாயார புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 

கொரோனா வைரஸ் தாக்குதலால், உலகின் மிகப் பெரும் வல்லரசான் அமெரிக்கா நிலைகுலைந்துள்ளது. உலகிலேயே அதிக பட்சமாக அமெரிக்காவில் தான் இப்போது பாதிப்பு அதிகமாகி, 4,35,128 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும் தினமும் நிகழ்வதால், இத்தாலிக்கு (17669) அடுத்து அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங் கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் உயிரிழப்பு மேலும் அதிகரித்து பட்டியலில் முதலிடத்தை எட்டுவது நிச்சயம் என்பதால் நிலை குலைந்து உள்ளது அமெரிக்கர் .

 

இந்த கொரோனா தொற்றுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், மாற்று வழிகளை பல நாடுகளும் கையாள்கின்றன. அமெரிக்காவோ, மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துகிறது அமெரிக்கா. ஆனால் இந்த மாத்திரைகள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ள இந்தியா, திடீரென ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. ஏனெனில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஆரம்பித்து விட்டதால், உள்நாட்டு தேவை கருதி நிறுத்திவிட்டது.

 

ஆனால், அமெரிக்காவோ இந்த மாத்திரைகளை கேட்டு முதலில் கெஞ்சியது. திடீரென மாத்திரை சப்ளை செய்யாவிட்டால் நடப்பதே வேறு என்பது போல், தக்க பதிலடி கிடைக்கும் என டிரம்ப் மிரட்டல் தொனியில் எகிறினார். இப்படி டிரம்ப் மிரட்டல் விடுத்த அடுத்த நாளே, மனிதாபிமான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை மீண்டும் ஏற்றுமதி செய்வதாக இந்தியா அறிவித்தது. அமெரிக்காவுக்கு மட்டும் 2.1 கோடி மாத்திரைகள் அனுப்பவும் முடிவு செய்தது.

 

இந்த முடிவால், இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என அமெரிக்க அதிபர் டிரம்ப் , தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளா​ர்​. அதில், மிகவும் அசாதாரணமான ஒரு காலச் சூழ்நிலையில்,  இரண்டு நண்பர்களுக்கு இடையே, மிக நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது.

 

ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரை ஏற்றுமதி குறித்த முடிவுக்காக இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி . இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க முடியாது . கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு மட்டுமின்றி மனித குலத்துக்கே உதவும் வலிமையான தலைமையாக விளங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி என ஏகத்துக்கும் புகழ்ந்து டிரம்ப் பதிவிட்டுள்ளார்.