ஆந்திரபிரதேசத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை திருப்பூர் மாநகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஒருவர் கைது செய் பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி.வனிதா IPS அவர்கள் உத்தரவின்பேரில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக திருப்பூர் மாநகர் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டத்தில் இருந்து தஞ்சா கடத்தி வரப்பட்டு திருப்பூரில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து டவேரா காரில் திருப்பூருக்கு காரில் கஞ்சா கடத்திவரப்படுவதும் தெரியவந்தது. இதன் படி அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு மெட்ரிக் பள்ளி அருகில் வியாழக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதில் கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த மேகமலை, காந்தி கிராமத்தைச் சேர்ந்த எம்.பால்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை காவல் ஆணையர் வனிதா நேரில் பார்வையிட்டார். மேலும், வாகனச் சோதனையில் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் சென்னகேசவன், தலைமை காவலர்கள் விஸ்வநாதன், சிவகுமார், முதல்நிலை காவலர்கள் பாஸ்கரன், தங்கராஜ் ஆகியோரை ஆணையர் வே.வனிதா வெகுவாகப் பாராட்டினார்.