தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரிப்பு..!

மிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்திலிருந்து 74 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்படும் 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வாக்குச்சாவடிகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக அர்ச்சனா பட்நாயக் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.