பிற மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து வர அரசு உதவ வேண்டும்

மகாராஷ்டிராவில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர காலம் தாழ்த்தாது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

திமுகவின் ஒன்றிணைவோம் வா செயல் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடத்திய காணொளி ஆலோசனையின் போது அவர்கள் இந்தக் கொரொனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்ததாகவும் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி‌ஆர் பாலுவும், மகாராஷ்டிர முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழக தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே கூறிய தகவல் ரயில்வே துறை அமைச்சர் பிஎஸ் கோயலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தாகவும் மத்திய அரசு சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தில் தொழிலாளர்களை அனுப்ப தயாராக உள்ளது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

 

தமிழக அரசு தரப்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள் என்றும் இதற்கு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதேபோல பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர சிறப்பு அதிகாரி அதுல்யா மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.