காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்

கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவை போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 14 ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 48 நாள் மண்டல பூஜை நடந்தது.

மண்டல பூஜையையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து, மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சிறப்பு ஆராதனை,அபிஷேகம் மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 2-வது கால யாக பூஜையுடன் மண்டல பூஜை நிறைவு விழா தொடங்கியது. விழாவில் 52 கலசங்கள், வைத்து, அகிலாண்டேஸ்வரி கன்னிமார் லக்ஷ்மி ஆஞ்சநேயர் உட்பட 45 சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உச்சிகால பூஜையின் போது அனைத்து பரிவார சன்னதிகளிலும் கும்பாபிஷேக கலசம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து வெற்றி விநாயகர் கும்பாபிஷேகம் செய்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை குழுவினர் மகேஷ்பாபு, சுந்தரவடிவேலு, ஜெயமோகன், கார்த்திகேயன், சம்பத் குமார் மற்றும் சுப்பிரமணிய ஐயர் உட்பட பலர் செய்திருந்தனர்.விழாவில் போத்தனூர்,மேட்டூர்,சுந்தராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.