பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு..!

ள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சகஸ்ரபுத்தே தலைமையிலான கல்வி மற்றும் குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

 

கொரொனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் இது அவர்களை மனதளவில் பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது. வீட்டிற்குள்ளேயே மாணவர்கள் அடைபட்டு இருப்பதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மோசமாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

பள்ளிகளை மூடியதால் குழந்தை திருமணங்கள், வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது போன்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது நல்லது என்றும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

 

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பள்ளிகளில் இரு ஷிப்ட்களில் பாடங்களை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அந்த குழு பரிந்துரைத்துள்ளது.