“நாளையே மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும்” ம.பி.முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் கண்டிப்பு!!

சட்டசபையை கூட்டி நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென மத்திய பிரதேச முதல்வர் நாத்துக்கு அம்மாநில ஆளுநர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநில அரசியலில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா . கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.230 பேர் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 114 ஆக இருந்த நிலையில் 92 ஆக குறைந்தது .ஆனால் ராஜினாமா செய்த 22 எம்எல்ஏக்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டுமே சபாநாயகர் ஏற்றிருந்தார்.

 

இந்நிலையில் 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜகவோ, கமல்நாத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியை தட்டிப்பறிக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் சட்டப்பேரவையில், கமல்நாத்தை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் பாஜக மனு கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

 

ஆனால் இன்று சட்டசபை கூடும் முன், முதல்வர் கமல்நாத் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், தமது கட்சி எம்எல்ஏக்கள் சிலர் பாஜக தரப்பின் பிடியில் சிக்கியிருப்பதால் அவர்களால் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவே வாக்கெடுப்பு நடத்த அவகாசம் வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் ஆளுநர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

 

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினர்.ஒரு நிமிடம் மட்டுமே ஆளுநர் உரை நிகழ்த்தி விட்டு புறப்பட்டார். அடுத்த நிமிடமே கொரானா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை மார்ச் 26-ந்தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் பிரஜாபதி அறிவித்தார்.

 

சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்காமல், ஒத்தி வைக்கப்பட்டதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று, ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் பாஜக எம்எல்ஏக்கள் முறையிட்டனர். கமல்நாத்துக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

இதற்கிடையே சட்டப் பேரவையை ஒத்தி வைத்ததை எதிர்த்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும் பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று மாலை, ம.பி.முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நாளையே சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அரசு மெஜாரிட்டி இல்லாத அரசு என கருதப்படும் என ஆளுநர் கண்டிப்பு காட்டியுள்ளார். இதனால் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா? மறுக்கும் பட்சத்தில் ஆட்சி கலைக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்து ம.பி. அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.