குமாரசாமி ராஜினாமா ! போலியான ராஜினாமா கடிதம் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது

தனது பதவியை கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்து அந்த கடிதத்தை ஆளுநருக்கு சமர்ப்பிக்க ரெடியாக இருப்பது போன்ற ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.குமாரசாமி அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ள நிலையில், இன்னும் கூட அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் பக்கம் கொண்டு வர முடியாமல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைமை திணறி வருகிறது.

 

இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத குமாரசாமி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடை பெறுவதற்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று இன்று மாலை முதல் ஒரு தகவல் பரவி வந்தது.இதை முதல்வர் அலுவலகம் மறுத்திருந்த நிலையில், கர்நாடக அரசின் அரசு சின்னத்துடன் கூடிய ஒரு கடிதத்தில், “எனது சொந்த காரணங்களால் நான் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து கடிதம் அளிக்கிறேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொண்டு அமைச்சரவையை கலைத்து உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருப்பது போல அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போலியான கடிதம் என்று முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.

 

சட்டசபையில் இதுபற்றி குமாரசாமி இன்று இரவு விளக்கம் அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:எனது ராஜினாமா கடிதத்தை, ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. முதல்வராக யார் காத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவர் எனது கையொப்பத்தை போலியாக உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளார் என்றார் அவர்.பாஜக தரப்பில்தான் இப்படி ஒரு போலி கடிதம் பரப்பப்படுவதாக ஆளும் கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.