47 பேருக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது..!

சாலையில் இறங்கி விவசாயி ஒருவரிடம் வாய்ச் சண்டையில் ஈடுபட்ட ஆத்தூர் தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்ன தம்பிக்கு இந்த முறை களத்தில் இறங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

வேறு சாதி பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து பெண்ணின் தந்தையை கண்ணீரில் தவிக்க விட்ட கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ காதல் நாயகன் பிரபுவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

கொரொனா காலத்தில் உறுதியான தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தொல்லை கொடுத்து பணியிட மாற்றம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான திருத்தணி எம்எல்ஏ நரசிம்மனுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை.

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனான மோதலை கட்சி கூட்டத்தில் சாதிய மோதல் ஆக மாற்ற நினைத்து முழங்கிய சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கும், கட்சிக்கும் அவ்வப்போது செக் வைக்கும் வகையில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு போட்டியின் போதும் டிடிவி தினகரன் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல் இருப்பதாகக் கூறினாலும் கடைசிவரை அவரால் அடையாளம் காட்ட இயலாத நிலையில் டிடிவி தினகரனை சந்தித்து திரும்பிய அறந்தாங்கி இரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

 

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதாலும், இணைந்த பின்னர் உள்ளூர் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாலும் கவுண்டம்பாளையம் வீசி ஆறுகுட்டி, மேட்டூர் செம்மலை, ஊத்தங்கரை மனோரஞ்சிதம், மேட்டுப்பாளையம் சின்னராஜ் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

மேலும் தங்கள் தொகுதியில் சொந்த செல்வாக்கு இழந்ததாக அறியப்பட்ட மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட மொத்தம் 47 பேருக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் கல்தா கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ள செழிப்பான வேட்பாளர்களுக்கு அதிகம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.